ஆந்திராவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவனை போலீசார் அதிரடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

இந்தியாவில் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தட்டுப்பாட்டை போக்க குண்டூரில் அரசு சார்பில் மலிவு விலையில், வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தனது 5 வயது மகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு, பெண் ஒருவர் வெங்காயம் வாங்கி வர சென்றுள்ளார். தாய் வெளியில் சென்றதும், அருகில் இருந்த வீட்டிற்கு டிவி பார்க்க அந்த சிறுமி சென்றுள்ளார். 

அப்போது அங்கிருந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயது மாணவன், சிறுமியின் வாயில் துணியை பொத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான, சிறுமியின் தாய் அளித்த  புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

நாட்டையே உலுக்கிய தெலங்கானா பெண் கால்நடை மருத்துவர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக, பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் நிறைவேறியது. இந்த சட்டம் நிறைவேறிய பின், நடந்துள்ள முதல் கைது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.