நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி .இவருடைய மனைவி ஹேமா இவர்களுடைய மகள் ஷிவானி .  இவர்களுடன் சுப்பிரமணியின் தாயார் ருக்குமணியும் வசித்து வந்தார். ஷிவானி குலசேகரம் பகுதியில் உள்ள ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

தொழில் அதிபரான சுப்பிரமணி அதே பகுதியில் பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று காலை நிறுவனத்தின் சாவியை வாங்குவதற்காக ஊழியர் ஒருவர் சுப்பிரமணி வீட்டுக்கு வந்தார்.

வீடு பூட்டிக் கிடந்தது. பலமுறை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. சுப்பிரமணியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோதும் யாரும் போனை எடுத்து பேசவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர், இதுபற்றி அதேபகுதியில் வசிக்கும் சுப்பிரமணியின் தாய்மாமா செல்லப்பனுக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் வீட்டின் மேல் மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக படுக்கையறையை பார்த்தனர். சுப்பிரமணி, அவருடைய மனைவி ஹேமா தரையிலும், தாய் ருக்குமணி, மகள் ஷிவானி கட்டிலிலும் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் ஜன்னல் கம்பிகளை அறுத்து எடுத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹேமாவின் காது, மூக்கின் வழியாக ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. அந்த அறையில் 4 குளிர்பான டப்பாக்கள் இருந்தன. அதன் அருகில் வெள்ளை நிறத்தில் ஒரு பொடி பாக்கெட்டும் கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

சுப்பிரமணி, ஒழுகினசேரி பகுதியில் தான் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வந்தார். பின்னர் அங்கு இருந்து ஒழுகினசேரியில் இருந்து புத்தேரி செல்லும் ரோட்டுக்கு ஏஜென்சி நிறுவனத்தை மாற்றிய பிறகு தொழிலில் அதிக லாபம் இல்லை. தொழிலை நடத்த வேண்டும் என்பதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. ஆனாலும் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்த நபர்கள் திருப்பி கேட்க தொடங்கினர்.

எப்படி கடனை திருப்பி செலுத்த போகிறோம் என சுப்பிரமணி மனம் உடைந்தார். கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் சோகமாகவே இருந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் மிகுந்த வேதனையில் இருந்துள்ளனர்.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் 4 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.