மதுரையைச் சேர்ந்தவர் ரவி. 38 வயதான  இவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடி, சென்னைக்கு வந்தார். வடபழனியில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி, சினிமா வாய்ப்புகள் தேடினார். அவருக்கு துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 10-க்கும் மேற்பட்ட படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அப்போது அவர், டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த தேவி என்பவரை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இருவரும் நட்பாக பழகினர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாகவும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


தேவிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர் குடும்பத்துடன், கொளத்தூர் ராஜமங்கலத்தில் வசித்து வந்தார். தேவியின் கணவர் சங்கர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார்.

தனது மகன்கள் வளர்ந்து விட்டதால் ரவியுடனான தனது கள்ளக்காதலை தேவி துண்டித்து விட்டார். 2 ஆண்டுகளாக அவர் ரவியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.

அதன்பிறகு சினிமாவிலும் வாய்ப்பு குறைந்ததால் தேவி, ராஜமங்கலத்தில் தையல் கடை நடத்தி வந்தார். ஆனால் தேவியுடனான தொடர்பை கைவிடாமல் ரவி, அடிக்கடி தேவிக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்தார். சிலநேரங்களில் அவர், தேவியை பார்க்க ராஜமங்கலத்துக்கே நேரில் வந்து சென்றார்.

ரவியின் தொந்தரவு தாங்க முடியாமல் தேவி, கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் ராஜமங்கலத்தில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு, சென்னையை அடுத்த வடக்கு கொரட்டூர் சியாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டுக்கு குடிபெயர்ந்தார். தனது செல்போன் எண்ணையும் மாற்றிவிட்டார்.

இதனால் ரவி, தனது கள்ளக்காதலி தேவி எங்கு இருக்கிறார்? என தெரியாததால் அவரை நேரில் பார்க்க முடியாமலும், செல்போனில் பேச முடியாமலும் தவித்துப் போனார்..

தேவியின் தங்கை லட்சுமி . இவர்  தனது கணவர் சவரியாருடன் கொளத்தூரை அடுத்த பாரத் ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் வசித்து வருகிறார். இதையறிந்த ரவி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் லட்சுமி வீட்டுக்கு சென்று, தேவி எங்கு இருக்கிறார்? என அவரைப்பற்றிய விவரங்களை கேட்டார்.
அதற்கு லட்சுமி, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, லட்சுமியிடம் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் கோபமான லட்சுமி, தனது அக்காள் தேவிக்கு போன் செய்து, ரவி வந்து தன்னிடம் தகாத முறையில் பேசுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேவி தனது கணவர் சங்கருடன் அங்கு வந்தார். பின்னர் ரவியிடம், இனிமேல் என்னை தேடி வரவேண்டாம் என்றார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த தேவி, அவருடைய கணவர் சங்கர், தங்கை லட்சுமி மற்றும் அவருடைய கணவர் சவரியார் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்கிருந்த சுத்தியலை எடுத்து ரவியை சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அவரது கை, கால்களை கட்டியதுடன், போர்வையால் அவரது கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர்.

இந்த கொலை  குறித்து  தகவல் அறிந்த ராஜமங்கலம் துணை நடிகர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துணை நடிகை தேவி, அவருடைய கணவர் சங்கர், தங்கை லட்சுமி, அவருடைய கணவர் சவரியார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.