அமமுக மானாமரை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார். மானாமதுரை பாண்டியன் நகரில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சரவணன் வசித்து வருகிறார். தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டவர். 

இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சியை மேற்கொண்டார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அந்த கும்பல் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீபத்தில் நடந்த சிவகங்கை மக்களவைத் தேர்தல் மற்றும் மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிரமாக பணியாற்றினார். இது தொடர்பாக கொலை நடைபெற்றதா? வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.