மதுரை அருகே அமமுக பொறுப்பாளர் நடை பயிற்சிக்குச் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் கொடூர கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதிமுகவை சேர்ந்த 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் அசோகன் (50). அமமுக பிரமுகரான இவர் நேற்று காலை தனது உறவினர் கார்த்திகைச்சாமி என்பவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது, 4 இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கொடூர கும்பல் அசோகனை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அசோகன் படுகொலை தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் உமாபதி, முருகேசன், பிரகாஷ்ராஜ், செல்வம், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அசோகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.