மதுரை அருகே உள்ள அழகர் கோயிலுக்குச் செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. கோயிலுக்குச் செல்லும் தார் சாலையில் சென்றால் தொலைவு என்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் மற்றொரு வழியான மலைப்பாதையில் செல்வார்கள். அந்த மலைப்பாதை ஒற்றையடிப் பாதைபோல் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

இந்த அடர்ந்த வனப்பகுதி பாதையின் வழியாக 17 வயது சிறுமியும் அவரது நண்பரும் சென்றுள்ளனர். அது அடர்ந்த காடு என்பதால் அந்த சிறுமியும், ஆண் நண்பரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை அறிந்த கொள்ளையன் ஒருவன் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளான்.

கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த  பணம், நகைகள் மற்றும் செல்போன்களை பறித்துள்ளான். அதோடு, திடீரென சிறுமியுடன் சென்ற ஆண் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியுள்ளான். பின்னர் காட்டிற்குள் சிறுமியை மட்டும் இழுத்துச் சென்று சிறுமியை கற்பழித்துள்ளான்.


தப்பிச் சென்ற இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அழகர் கோயில் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கிருந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், மலைப்பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளியை போலிஸார் கைது செய்தனர். பிடிபட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரை மேலூரைச் சேர்ந்த தர்ஷன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தர்ஷன் மீது போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் போன்றே பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும், காதலராக வருபவர்கள் வீட்டில் சொன்னால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் என பயந்து சொல்லாமல் விட்டுவிடுவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.