செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் அஜித்தின் மேலாளர் அச் செய்தியாளரிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இனி எந்த இடத்திலும் பத்திரிக்கையாளர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் அஜித்தின் மேலாளர் அச் செய்தியாளரிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இனி எந்த இடத்திலும் பத்திரிக்கையாளர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். மேலும் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளரை கட்டிப்பிடித்து அவர் வருத்தம் தெரிவித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா திருமணம் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் நேற்று வெளியிட்டார். இதற்காக அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் ரா.ஆனந்தன் என்பவர் விக்னேஷ் சிவன் உடன் செல்பி எடுக்க அப்போது அங்கிருந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுபாஷ் சந்திராவை பார்த்து ஓரம் போங்கல் என செய்தியாளர் கூறியதாக தெரிகிறது, அப்போது பதிலுக்கு சுரேஷ் சந்திரா ' நீ யார்' என செய்தியாளரை ஒருமையில் கேட்க பதிலுக்கு செய்தியாளரும் நீ யார் என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் செய்தியாளரை தாக்கி அவரை அவமரியாதை செய்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட செய்தியாளர் இதுகுறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது புகார் கொடுத்தார். வழக்கு காவல் நிலையம் வரை சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என பதறிய அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நடந்து தவறுக்கு மன்னிப்புகூட கேட்கிறேன், தயவுசெய்து சமாதானமான செல்லாம் என கதறியுள்ளார். இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் அவரது தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் மன்ற பிரதிநிதிகள், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா என மூன்று தரப்பினரும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதுடன் இனி இப்படி நடக்கவே நடக்காது என எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.
தான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பிஆர்ஓவாக இருந்து வருகிறேன், இதுவரையில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை, அன்று நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனி எந்த இடத்திலும் பத்திரிக்கையாளர்களின் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படாத வகையில் நடந்து கொள்வேன். என அவர் உறுதி அளித்தார். அதன்பிறகு அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர் மன்றம் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதற்காக அஜித் மேலாளர் மீது கொடுத்த புகார் விவகாரம்த்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர் மன்றத்தில் இணை செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
அன்புத் தோழர்களே, வணக்கம்.
நேற்று (07-06-2022) செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அங்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் திரு.ரா.ஆனந்தனுக்கும்திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர் திரு.சுரேஷ் சந்திரா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இணக்கமற்ற சூழலில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தது. செய்தியாளர் ஆனந்தன் இது தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், புதியதலைமுறை பிரதிநிதி,பத்திரிகையாளர் மன்ற பிரதிநிதி மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகை தொடர்பாளர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் ஏற்பட்ட இணக்கமற்ற சூழலுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

எழுத்துப் பூர்வமாகவும் கடிதம் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் அனைவரது கண்ணியம் மாண்பு காக்கப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது.இரு தரப்பிலும் சந்தித்த கசப்புகள் பேசப்பட்டு சரி செய்யப்பட்ட நிலையில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் திரும்பப் பெறப்பட்டது. தங்களது செய்தியாளருக்கு ஏறபட்ட கடினமான சூழலை அறிந்தவுடனே நேரடியாக வந்திருந்து உள்ளப்பூர்வமாக உறுதியளித்த புதிய தலைமுறை நிர்வாகம் குறிப்பாக ஆசிரியர் திரு.கார்த்திகை செல்வன் அவர்களின் அக்கறையும் முயற்சிகளும் பாரட்டத்தக்கது.
இந்த விவகாரத்தில் உடனடியாக களத்திற்கு வந்த நம்முடைய உறவுகள் , அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுத்த காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வதும் நம் கடமை..பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதும் அவர்களை சுதந்திரமாக கடமையாற்ற விடுவதுமே நல்ல சமுகத்தின் நல்லடையாளம் என்பதை உறுதிப்படுத்த அனைத்து தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைந்தது உறவுக்கும் மனித தன்மைகளுக்கும் கை கொடுப்போம் அதே நேரம் கடமைகளை செய்யும் போது உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுப்போம்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். திருக்குறள் - 156 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
