பண்ருட்டியில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக எம்எல்ஏ சத்யாபன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் 2 பேரை 10 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளருக்கும், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யாபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்கனவே தேர்தல் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இருதரப்பினரும் தனித்தனியாக ஈடுபட்டு வந்தனர். பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் கிருமி நாசினி தெளிப்பதில் தொடங்கி, நிவாரண உதவி வழங்குவது வரை அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், நேற்று இரவு எம்எல்ஏ சத்யாபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான மணிகண்டன் மற்றும்  பாலாஜி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும் அவர்கள் 2 பேரும் அங்குள்ள பம்ப் செட்டில் இருந்து செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தனர்.


அப்போது அவர்களை சுற்றிவளைத்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையமு சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் இருவரும் துடிதுடித்து உயிழந்தனர். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பதட்டம் நிலவியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேர்தல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.