தேனியில் கர்ப்பிணி மனைவியைக் கொடுமையாகத் தாக்கி கொலை செய்த கணவருக்குத்  மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் ஆண்டிப்பட்டி தாலுகா பொம்முராஜபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகள் கற்பகவல்லிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் இவர்கள் இருவரும் மேகமலை அருகே உள்ள மணலாறு கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கற்பகவல்லி மீண்டும் கர்ப்பமானார். சுரேஷ் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் மேகமலை - ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.

பேரூராட்சி தலைவராக சுரேஷ் பொறுப்பேற்றதும் அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறி உள்ளன. பெண்கள் சவகாசம், மதுபோதை என தன் இஷ்டத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார் இதனால் கற்பகவல்லிக்கும், சுரேஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதில் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடிந்த நிலையில் தற்போது நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றவாளி சுரேஷிற்கு 10000 ரூபாய் அபராதமும் சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.