காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே அதிமுக பிரமுகரை சரமாரி வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ராஜா (53). அதிமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் கள்ளச்சாராய விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், ராஜாவை சுற்றிவளைத்தனர். பிரச்னை நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த ராஜா அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அவரை சுற்றிவளைத்து அந்த கும்பல் சரமாரி வெட்டியது. இதை பார்த்து பொதுமக்கள் திரண்டதால் வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியது.

இதன்பிறகு பொதுமக்கள் வந்து, ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜாவை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ராஜா தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக வெட்டப்பட்டாரா, கள்ளச் சாராய விற்பனை போட்டியால் நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் அதிமுக பிரமுகர் வெட்டப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.