முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பதாக சிலம்பரசன் போலீசுக்கு தகவல் தெரிவிப்பதாக சந்தேகமடைந்ததால் கும்பலாக சேர்ந்து சிலம்பரசனை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்த அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை எம்ஜிஆர் நகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(32). இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். 

இந்நிலையில்,நேற்று இரவு 11 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து சிலம்பரசனை ஓட ஓட அரிவாளால் வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த கும்பல் தப்பியோடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிலம்பரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தமிழ்ச்செல்வன், ரஞ்சித்குமார் ஆகியோர் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பதாக சிலம்பரசன் போலீசுக்கு தகவல் தெரிவிப்பதாக சந்தேகமடைந்ததால் கும்பலாக சேர்ந்து சிலம்பரசனை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.