திருவாலங்காட்டில் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்கும் போட்டியில், அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை கொல்ல முயன்ற வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக - 6, அதிமுக - 8, பாமக - 1, பாஜ - 1 இடங்களில் வெற்றி பெற்றன. இங்கு ஒன்றிய குழு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுங்கட்சியில் ஒன்றிய பொறுப்பில் நிர்வாகியாக இருந்து வருபவரின் உறவினர் மேனகாவும், முன்னாள் எம்.பி.யின் தம்பி மனைவி ஜீவா ஆகியோரும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி நடைபெற இருந்த ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் போதிய கோரம் இல்லாததால் மறுதேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு அருகே கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையில் 4 மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அதிமுக பெண் கவுன்சிலர் ஜூவா மற்றும் அவரது கணவரை கொலை செய்ய பதுங்கியிருந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். 


இதையும் படிங்க;- மாதவிடாய் என்றும் பாராமல் மிருகத்தை விட கொடூரமாக இளம்பெண் கூட்டு பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இதுதொடர்டபாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை திருவாலங்காடு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஒன்றிய கவுன்சிலர் ஜீவா, சேர்மன் பதவிக்கு போட்டியிட உள்ளதால், எதிர் தரப்பினர் அவரை கொலை செய்ய, நான்கு வாலிபர்களை கத்தி கொடுத்து அனுப்பி உள்ளனர் என கூறப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில், அவர்கள், திருவாலங்காடு அருகே ராஜபத்மநாபபுரம் காலனியை சேர்ந்த விஷ்ணு (20), நிதிஷ்குமார் (19), திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த ஐயப்பன் (22), அப்துல் ரசாக் (19) என தெரிந்தது. மேலும், திருவாலங்காட்டில் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிப்பதில் ஜூவா மற்றும் மற்றொரு தரப்புக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. 

ஆகையால், ஒரு தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் அறிவுறுத்தலுடன், மற்றொரு தரப்பை சேர்ந்த ஆளுங்கட்சியின் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை கொல்வதற்காக வந்ததாக கூறப்படுகிறது. 4 வாலிபர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம். முழு விசாரணை முடித்த பின் தான், உண்மை நிலவரம் தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.