தேனியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்மமான முறையில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி குமாரபுரத்தை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனர் பாண்டித்துரை மகன் சதீஷ்குமார் (24). அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி துணை செயலராக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வந்தார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் மதுரைக்கு செல்வதாக கூறி விட்டு காரில் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை டி.வி.ரெங்கநாதபுரத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சதீஷின் உடல் கிடந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியால் சதீஷ் கொலையானாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என விசாரணை நடக்கிறது. மேலும், சதீஷ்குமாரின் செல்போன் அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.