நெல்லையில் அதிமுக பிரமுகர் ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (60). இவர் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருக்கிறார். இவர் நேற்று மதியம் தனது காரில் ஆலங்குளத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு வங்கி முன்பு காரை நிறுத்திவிட்டு, அந்த வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுத்தார். பின்னர் மற்றொரு வங்கியில் சென்று தனது கணக்கில் இருந்து மேலும் ரூ.4 லட்சம் எடுத்தார். 

இதையடுத்து 2 வங்கிகளிலும் இருந்து எடுத்த ரூ.8 லட்சத்தை தனது காரில் வைத்தனர். பின்னர் இருவரும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே காரை நிறுத்தி, கார் கண்ணாடியை ஏற்றி, லாக் செய்து விட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் உள்ளே சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. 

மேலும் காரில் இருந்த ரூ. 8 லட்சத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.