போலீசாரின் வாகன சோதனையின் போது நபர் ஒருவர் மது போதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வண்ணாரபேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தகராறில் ஈடுபட்ட நபர், திடீரென தனது உடல் முழுக்க பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வண்ணாரபேட்டை பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த செல்வம் என்ற நபரை சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். சோதனையில் செல்வம் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போதையில் வாகனம் ஓட்ட அனுமதிக்க முடியாது என கூறி செல்வத்தின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாக்குவாதம்:
மது போதையில் இருந்த செல்வம் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், தனது முயற்சி பலன் அளிக்காததை அடுத்து செல்வம் அங்கிருந்து கிளம்பி சென்றார். எனினும், அடுத்த சில நிமிடங்களில் கையில் பெட்ரோல் கேனுடன் செல்வம் வாகன சோதனை நடக்கும் இடத்திற்கு மீண்டும் வந்தார். வந்தவர் நொடிகளில் உடல் முழுக்க பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக போலீசாரை மிரட்டினார்.
செல்வத்தின் நடவடிக்கையை பார்த்து விரைந்த போலீசார், தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அதன் பின் செல்வத்தின் உறவினரை அழைத்த போலீசார், மது போதையில் வாகனம் ஓட்டக் கூடாது என எச்சரித்து செல்வத்தின் உறவினர் இடம் வாகனத்தை ஒப்படைத்தனர். பின் செல்வத்தின் உறவினர் வாகனத்தை ஓட்டிச் சென்றார். போலீசாரின் வாகன சோதனையின் போது நபர் ஒருவர் மது போதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
