தன்னுடைய உயிருக்கு ஆபத்து  இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் இந்து கோயில்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் அவரை மிக கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார்.  காயத்ரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் அவரது வீட்டை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். 

அதேநேரத்தில் விதிமுறைகளை மீறி பதற்றம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்,  என காயத்ரி ரகுராமன் டுவிட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.  ஏற்கனவே திருமாவளவன் அவர்கள் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தும், அவரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம் .  விடுதலை சிறுத்தைகள் சமூக வலைத்தளத்தின் மூலமாக காயத்ரி ராகுராமுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை காயத்ரி ரகுராம் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் தொலைபேசி மூலமாக தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், எனவே  தனக்கும் தனது வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என  மனு கொடுத்துள்ளார். மனு கொடுக்க வந்த காயத்திரி ரகுராமை பேட்டி காண செய்தியாளர்கள் திரண்டிருந்தனர்.  

ஆனால் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து  கமிஷனர் அலுவலகத்தின் பின் வாசல் வழியாக அவசர அவசரமாக காயத்ரி ரகுராம் வெளியேறினார்.  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை விமர்சித்த விவகாரம் தொடர்பாக  அக்கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆபாசமாகத் திட்டுதல்,  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,  சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புதல்,  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காயத்ரி ரகுராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.