1960-களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ‘டார்சன்’ தொடரில் நடித்து புகழ்பெற்றவர்  ரோன் ஏலி. 1975-ல் வெளியான ‘டாக் சாவேஸ்: தி மேன் ஆப் புரோன்சி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் புகழ் பெற்ற நாவலாசிரியரும் ஆவார்.

ரோன், தனது மனைவி வலேரி லுண்டீன்  மகன் கேமரூன் ஆகியோருடன் கலிபோர்னியா மாகாணம் ஹோப் ராஞ்ச் நகரில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரோன் உள்பட 3 பேரும் வீட்டில் இருந்தபோது, தாய் வலேரி லுண்டீனுக்கும், மகன் கேமரூனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கேமரூன் தாய் என்றும் பாராமல் வலேரி லுண்டீனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரோன், உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு போலீசை வரவழைத்தார். ஆனால் அதற்குள் கேமரூன் கத்தியுடன் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கேமரூனை அந்த பகுதி முழுவதும் தேடினர். அப்போது வீட்டின் அருகே ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கேமரூன், போலீசாரை பார்த்ததும் அவர்களை கத்தியால் குத்த முயன்றார்.

இதையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.