ஒரு தலைக் காதல், காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக ஆண், பெண் மீது ஆசிட் வீசி வெறுப்பை உமிழும் சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றுள்ளது. ஆக்ரா அருகே ஒரு பெண், ஆண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆக்ரா அருகில் உள்ள அலிகாரில் ஜீவங்கர் பகுதியில் 19 வயதான பெண் அவரது காதலன் மீது ஆசிட் வீசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் மீது 326 ஏ பிரிவின் கீழ் கவார்ஸி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் தாயார் இதுபற்றி கூறும்போது, அந்தப் பெண்ணும் எனது மகனும் காதலித்து வந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னால் அவளுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். ஆனால் அந்தப் பெண் அவனை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாள். தினமும் போன் மூலம் அவனை துன்புறுத்தி வந்தாள். வியாழக்கிழமை காலையிலும் அவளது போனுக்கு அவன் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் அவன் நின்று கொண்டிருக்கும் போது அவள் ஆசீட் வீசியுள்ளாள்” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண், “அந்தப் பையனை நான் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினான். இல்லையென்றால் என்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டினான்” என்று கூறியுள்ளார். ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.எஸ். ஸைதி ஆசிட் வீச்சினால் அந்த இளைஞரின் கண் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறியுள்ளார்.