சேலத்தில் காயத்ரி மீது சீனிவாசன் என்பவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி என்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

இந்நிலையில் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இன்று காலை 2 மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்திரி இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றார். குகை மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்து காயத்திரியின் முகத்தில் ஆசிட்டை வீசினர். 

இதில் காயத்திரியின் முகத்தின் வலது பக்கம் மற்றும் நெஞ்சு பகுதியில் பரவியது. வலி தாங்க முடியாமல் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறி அழுதார். பலத்த காயமடைந்த காயத்திரியை பொதுமக்கள் மீட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஆசிட் வீசியவர் பக்கத்து தெருவை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பக்கத்து தெரு என்பதால், சீனிவாசனுக்கும், காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த காயத்திரியின் பெற்றோர், உறவினர்கள் கண்டித்தனர். சீனிவாசனிடம் பேசி வருவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள சீனிவாசனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.