கள்ளக்காதல் விவகாரத்தில் தன் சொந்த குழந்தைகளையே  கொன்றுவிட்டு சிறையில் கைதியாகி இருக்கும் அபிராமியின் கதை அனைத்து தரப்பினரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 2 மாதங்களாக தனக்கு தெரிந்த சுந்தரம் என்ற நபருக்காக அபிராமி தன் அழகான குடும்பத்தையே சிதைத்திருக்கிறார். 18 வயதில் காதல் திருமணம், தொடர்ந்து இரண்டு அழகான குழந்தைகள், வங்கியில் வேலை பார்க்கும் கணவன் என வாழ்க்கையில் எல்லாவிதமான சந்தோஷங்களும் கிடைத்தும் அதை தன் புத்தியால் இழந்து தவித்து கொண்டிருக்கிறார். அபிராமி.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் நல்ல முறையில் தான் குடும்பத்தை கொண்டு போயிருக்கிறார். இதனை அவரது கணவரே தெரிவித்திருக்கிறார். ஆனால் அபிராமிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி இருந்ததை அவர் உணர்ந்திருக்கவில்லை. இவர்கள் வீட்டில் பெரியவர்கள் என்று யாரும் துணைக்கு இல்லாத காரணத்தால், அபிராமிக்கு துணை என்றோ அவரது நடவடிக்கைகளுக்கு கண்காணிப்பு என்றோ யாரும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

முகநூல், வாட்ஸ் அப் என்று செல்ஃபோனே உலகம் என்று இருந்த அபிராமி மேக்கப், டப் ஸ்மாஷ், சாட்டிங் என்று தான் தன் நேரத்தை போக்கி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தான் அதிகம் நேரத்தை செலவிட்டிருக்கிறார் என்பது இவரின் முகநூல் பக்கத்தை பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தன் கணவனின் அன்புக்காகவும் ஏங்கி இருக்கிறார். இதனை பிப்ரவரி மாதம் காதலர் தினச்சிறப்பு என இவர் பகிர்ந்திருந்த முகநூல் பதிவில் இருந்து நாம் அறிய முடிகிறது.
”திருமணமாகி 35 வருடங்கள் அவருக்கு 61 வயது. கடந்த மாதம் ஓய்வு பெற்று மனைவியோடு சாவகாசமாக இருக்கிறார்வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியே பார்ப்பதே. ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி.ஞாயிற்றுகிழமை கூட அங்க இங்க சென்று விடுவார். கடுமையாக உழைத்து குடும்பத்தை பார்த்தார்

இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியோடு பேச முடிகிறது. வீட்டில் எது எங்க இருக்கு என்று அறிய முடிகிறது வீட்டு வராந்தாவில் உட்கார்ந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார். மனைவி வந்து பக்கத்தில் நின்று கூப்பிட்டிங்களா என்றார்.

ஆமா.. ஆமா வா உட்காரு.. உன்கிட்ட மனசு விட்டு பேசி எவ்வளவு காலமாச்சு என்றார்.அவளும் உட்கார அவள் கையை பற்றி ஏதோ பேச வந்தவர்..அவள் கை சொரசொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார். முகம் சுருங்கி கண் கலங்கியது..அம்மு என்னது.கை பூரா வெட்டுக்காயமா இருக்கே.. நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு..என்னது.. நீ ன்னய கல்யாணம் செய்து வரும்போது பட்டு மாதிரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுங்பபா இருந்தததே என நிமிர்ந்தார்..அவள் மெல்லிய சிரிப்புடன் நா எதை சொல்ல.. 35 வருஷத்தல எண்ணெய் தெரிச்சிருக்கலாம்.. காய்கறி நறுக்கும் போது கத்தி கீரியிருக்கலாம்,பாத்திர சூடு பட்டிருக்கலாம் .. இப்படி ஏதேதோ நடந்திருக்கும் என்று சொல்லும் போது மெல்லிய கோடாய் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.

ஏன் இதை நீ முன்னமே செல்லல என்று வலி நிறைந்த குரலில் கேட்ட போது நீங்க என்ன சந்திக்கிறத இரவுல தான் இதுவும் இருட்டில எப்படி என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றார் மனைவி.உடல் காயங்களே இப்பத்தான் தெரியுது.மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க என்றார் மனைவி.என்னை மன்னிச்சுடு அம்மு. பணம் சேர்க்கும் பரபரப்பில் இருந்திட்டேன் என்று அவள் கையை பிடித்து மெதுவாக அழுத்தினார்.எனக்கு ஒரு ஆசை இப்பவாவது கேட்கட்டுமா என்றார் மனைவி.

கேளுமா என்று கணவர் கேட்க.. கல்யாணமான புதிதுல உங்க மடியில நானும் என் மடியில நீங்களும் தலை வச்சு படுத்தருக்கோம். அப்புறமா 35 வருஷமா தலையணைல தான் தலை வச்சு படுத்திருக்கோம்.. இப்பவாவது உங்க மடியில தலை வச்சு படுக்கவா என்று  கேட்க..கணவருக்கு கண்கள் கலங்கி அவளை அணைத்து குழந்தையை போல படுக்க வைத்தார்.”

இவ்வளவு உருக்கமான கதையை அவர் பகிர்ந்திருக்கும் போதே தெரிகிறது அவர் மனதளவில் எவ்வளவு தூரம் தனிமையை அனுபவித்திருக்கிறார். என்று. இதனை அவர் முகநூலில் பகிர்வதை விட்டுவிட்டு தன் கணவரிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட அவரின் பிரச்சனைகள் பாதி குறைந்திருக்கும். சரியாக ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கு கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் இது போன்ற நிலை நீடித்தால், இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

கணவன் தனக்காக நேரம் ஒதுக்காததாலோ என்னவோ அபிராமிக்கு சுந்தரம் எல்லாமாக தெரிந்திருக்கிறார். ஆனால் அதற்காக சுந்தரம் பேச்சை கேட்டு, பிஞ்சு குழந்தைகளை கொல்லும் அளவிற்கு அபிராமி சென்றிருப்பது, ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமே.