சென்னையில் இளைஞர் ஒருவர் போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மேலும், அவனிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைஸ் முகமது (27) என்பவர், ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான பெண் ஊழியர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி தவித்து வந்தனர். 

இங்கு பணிபுரியும் அம்பத்தூரைச் சேர்ந்த பெண் ஊழியர் அளித்த புகாரில், தங்கள் அலுவலகத்தில் நண்பர்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோக்கள் அனைத்தும் போலியான முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து கமெண்ட்கள் பதிவிடப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். பதிவிடப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் மருத்துவமனையின் திட்ட மேலாளர் கைஸ் முகமதுவுடன் எடுக்கப்பட்டவை என்பதால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவலை அவர் வெளியிட்டார். 

சென்னையில் அவசர அவசரமாக ரயில், பேருந்து, மற்றும் கடை வீதிகள், சாலைகளில் நடந்து செல்லும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று ஆபாசமான கோணத்தில் வீடியோவாக பதிந்து முகநூலில் பதிவிட்டு வந்துள்ளான். அதன் தொடர்ச்சியாக, ராயப்பேட்டை மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுடன் செல்பி எடுத்து அதனை தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துக் கொண்டு பெண்களின் புகைப்படங்களை மட்டும் தனியாக கத்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்து வந்துள்ளான்.

முகநூல் பக்கத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்ற பெயரில் போலியான கணக்கு தொடங்கப்பட்டது தெரியவந்தது. இன்னும் சில பெண்களின் புகைப்படங்களை முகத்தை கூட மறைக்காமல் அப்படியே பதிவேற்றம் செய்துள்ளான். அவற்றில் உள்ள பெண்களை ஆபாசமாக வர்ணித்து கருத்தும் பதிவிட்டுள்ளான். இதனை ஒரு தொழிலாகவே அந்த நபர் செய்து வந்துள்ளான். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் 10 பேர் வரை புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை சிறையில் அடைத்தனர். அந்த பேஸ்புக் கணக்கை போலீசார் லாக் செய்தனர்.