கோவையை அடுத்த அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் . இவரது மனைவி காஞ்சனா .  இவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரை சேர்ந்தவர். கனகராஜ் சொந்தமாக ஒரு பொக்லைன் எந்திரம் வைத்துள்ளார். அதை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். 

கனகராஜூம், காஞ்சனாவும் கோவை சரவணம்பட்டியை அடுத்த விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு அரும்பதா என்ற 2½  வயது பெண் குழந்தை இருந்தது.

காஞ்சனாவின் தாயார் பேச்சியம்மாள் வீடு விளாங்குறிச்சி பழனியப்பன் தோட்டத்தில் உள்ளது. அங்கு காஞ்சனா தனது மகளுடன் நேற்று முன்தினம் சென்றார். கனகராஜ் அன்னூரில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்று விட்டார். 

நேற்று இரவு தாயார் வீட்டில் காஞ்சனா தங்கினார். அன்று இரவு காஞ்சனாவின் உறவினர்கள் 2 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள். அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை அரும்பதாவுக்கு பால் கொடுத்து காஞ்சனா தூங்க வைத்துள்ளார். அதன்பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து பார்த்த போது அருகில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காஞ்சனா மற்றும் உறவினர்கள் வீட்டின் அருகே குழந்தையை தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிலர் கயிற்றைக்கட்டி கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை தூக்கினார்கள். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து அருகில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குழந்தை அரும்பதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2½ வயது பெண் குழந்தை பாழடைந்த கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. நேற்று முன்தினம் இரவு சம்பவம் நடந்தபோது வீட்டில் இருந்தவர்கள் யார்-யார் என்று போலீசார் விசாரித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது குழந்தை அரும்பதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார்  சந்தேகித்தனர்..

இதைத் தொடர்ந்து போலுசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சிறுமியின் மாமாவை போலீசார்  கைது செய்யதனர். ரகுநாம் என்ற அந்த இளைஞர்  பாலியல் நோக்கத்துடன் சிறுமியை தூக்கி சென்ற போது கத்தியதாகவும், அப்போது வாயை மூடிய போது சிறுமி மயங்கியதால் பயத்தில் சிறுமியை கிணற்றில் தூக்கி வீசியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.