சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லதுரை. என்ஜினீயரான இவர் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே வணிக வளாகத்தில் பணியாற்றி வந்த கீதாவை செல்லதுரை காதலித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 23-ந் தேதி ஓமலூரில் உள்ள செல்லதுரையின் குலதெய்வ கோவிலில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

முதல் நாள் செல்லதுரை வீட்டில் தங்கிய கீதா   காலையில் கழிவறைக்குச் செல்ல கேட்டபோது வீட்டில் கழிவறை இல்லை என பதில் வந்துள்ளது. இதனால் திடுக்கிட்ட கீதா என்ன கழிவறை இல்லையா? அப்படியானால் அனவரும் பொதுவெளியில்தான் கழிவறையை பயன்படுத்துகிறீர்களா? என்று கேட்டு கோபப்பட்டுள்ளார்.

கழிவறை இல்லாத வீட்டில் வாழ முடியாது என்றுக் கூறி தனது தாய்வீட்டுக்கு கிளம்பியுள்ளார். கணவர் செல்லத்துரை எவ்வளவோ சமாதானம் செய்தும் கீதா நிமிடம் கூட இங்கு இருக்க முடியாது என சென்றுவிட்டார். மனைவி பிரிந்துச் சென்றதால் அவரை சமாதானப்படுத்த சேலம் பள்ளப்பட்டிக்கு சென்று சமாதானப்படுத்தி அழைத்துவர முயன்றுள்ளார்.

ஆனால் கீதா வரவே முடியாது என மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த செல்லதுரை தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். காதல் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.  அடுத்த நாள் காலை  விவசாய தோட்டம் வழியே சென்ற பொதுமக்கள் கிணற்றில் செல்லதுரையின் பிணம் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கும், சூரமங்கலம் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் செல்லதுரையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கழிவறை இல்லாத காரணத்தால் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த புதுமாப்பிள்ளை திருமணமான மூன்றாவது நாளில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.