அவ்வ்வ்வ்.......! என்று வைகைப்புயலைப் போல் அழுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. காரணம் அந்தளவுக்கு வெரைட்டி வெரைட்டியா, டிஸைன் டிஸைனா, கொடுமைகள் நடக்குது தமிழ்நாட்டுல. அதுல மிக முக்கியமான ஒரு கொடுமை இது! கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தட்டாம்புதூர் கிராமத்தை சேர்ந்தவங்க வழக்கம்போல விடிகாலையில எழுந்தாங்க. இன்னைக்கு பொழுது முடிஞ்சு, நாளைக்கு விடிஞ்சா தீபாவளி. அவனவன் அவலாக வேலையை பார்க்க ஆரம்பிச்சாங்க. காலையில ஒன்பதரை மணி மாதிரி இருக்கும், கணியூர் பஞ்சாயத்தின் மாஜி தலைவர் செல்வராஜ் அப்படிங்கிறவரு ஊரை தாண்டி போயிட்டிருந்தார். அப்ப ஊர் எல்லையில் இருக்குற சுடுகாடுல ஏதோ புகையுறதை கவனிச்சு, நின்னு பார்த்திருக்கார். அங்கே பிணங்களை எரிக்கும் எரிமேடையில் அப்படியே பப்ளிக்காக ஒருபிணம் எரிஞ்ச நிலையில் கிடந்திருக்குது.

 ‘ஊர்ல இப்போ ஒண்ணும் எழவு விழலையே. அப்படியே விழுந்திருந்தாலும் நம்ம கவனத்துக்கு வராம போயிருக்காதே! அப்படியே தப்பியிருந்தாலும், இப்படியா பொணத்தை பப்ளிக்கா போட்டு எரிப்பாங்க?’ என்று மனதினுள் குழம்பியபடியே அப்படியே சைஸாக சுடுகாட்டினுள் நுழைஞ்சு, எரிமேடை பக்கமா போயி எட்டிப் பார்த்தவருக்கு பேயடிச்சிடுச்சு. ஆமாங்க, நல்ல திடகாத்திரமான ஆண் பிணம் அது. மூக்கில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி, கண்களை நிறைச்சு, நெத்தியில் வழிஞ்ச படி அந்த பொணம் கெடந்திருக்கு. பாதி எரிச்சும், எரியாத நிலையிலுமா இருந்திருக்குது.  அரண்டு போன செல்வராஜ், ஊருக்குள்ள ஓடியாந்து மத்தவங்கட்ட வெவகாரத்த சொல்லிப்போட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் வந்த போலீஸ் டீம், அந்த பொணத்தை கைப்பற்றி விசாரிக்கிறாங்க.
முதற்கட்ட விசாரணையில் பிணமாய் கிடப்பவரின் வயது ஒரு முப்பது சொச்சமிருக்கலாம், உடம்பில் வேறெங்கும் காயமில்லை ஆனால் மூக்கு மட்டும் பெயர்ந்துள்ளது. எங்கேயோ கொலை பண்ணிட்டு இங்கே வந்து எரிச்சிருக்காங்கன்னு தெரியுது! என்பதெல்லாம் தெரிய வந்திருக்கிறது.

 

இந்த சம்பவத்தால் கருமத்தம்பட்டி வட்டாரம் கிடுகிடுத்துக் கிடக்கிறது. ஏன்னா, ஊருக்கு பொதுவா தொட்டி கட்டிவிட்டால், சும்மா கெடக்கேன்னு வர்றவன், போறவன் குளிக்கிறதில் தப்பில்லை. ஊருக்கு நடுவுல திண்ணை கட்டிவிட்டால், யாரு வேணா வந்து படுத்து அசதிக்கு தூங்கலாம் தப்பில்லை. ஆனால், ஊருக்கு வெளியில சுடுகாடு சும்மாவே கெடக்குதேன்னு,  எவனையோ கொன்னுட்டு இங்கே வந்து பொணத்தை பாதியும் மீதியுமா எரிச்சு போடுறது என்னாங்க கணக்கு? என்பதே தட்டாம்புதூர் மக்களின் தாறுமாறான கேள்வி. இதுக்கு அந்த பொணமாய்யா பதில் சொல்லும்?இப்படித்தான் இதே கோயமுத்தூர்ல, சிட்டி லிமிட்டுக்குள்ள சில வருடங்களுக்கு முன்னாடி நியூ இயருக்கு மொதல் நாள் ராத்திரி ஒரு வளர்ந்த இளம் சிறுவனை சக பசங்களே கூல் டிரிங்ஸ்ல விஷம் கலந்து கொடுத்து கொன்னுட்டு, நைட்டோட நைட்டா அங்கே இருக்கிற சுடுகாட்டுல குழி தோண்டி பொதச்ச கொடுமையும் நடந்துச்சு.