கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். எம்.எஸ்.சி. பட்டதாரி. இவர் போலீஸ் நண்பர் குழுவில் இருந்து வந்தார். பின்னர் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள காட்டு பகுதியில் சீனிவாசன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து  புவனகிரி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அவரது பின்தலையில் காயம் இருந்ததால், அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு உடலை காட்டு பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி முன்பு கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தாமரைச் செல்வி என்பவர் சரணடைந்தார்.

அப்போது அவர், சீனிவாசனை நானும், எனது தாய் லட்சுமியும் சேர்ந்து கொன்றோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலம் பகீர் ரகமாக இருந்தது.

தாமரைச் செல்வியின் கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த  1½ ஆண்டுக்கு முன்பு சீனிவாசனை சந்தித்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

பின்னர் அவர்கள் இருவரும்  அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் கள்ளக்காதலன் சீனிவாசனிடம், இனிமேல் இங்கே வராதே என்று கூறியுள்ளார். ஆனால், அவர்கள் உல்லாசமாக இருந்த படத்தை செல்போனில் படம் பிடித்துள்ளேன். அதை உனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என்றும், இணைய தளங்களில் வெளியிடுவேன் என்றும்  சீனிவாசன் மிரட்டியுள்ளார்..

இதனால் பயந்துபோன தாமரைச் செல்வி  சீனிவாசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து சீனிவாசனை வீட்டுக்கு வரவழைத்த தாமரைச் செல்வியும், அவரது  தாய் லட்சுமியும் சீனிவாசனை அடித்துக் கொன்றனர்

பின்னர் அவரது உடலை இருவரும் சேர்ந்து அருகில் உள்ள கருவை காட்டுக்கு தூக்கி சென்று வீசிவிட்டுச் சென்றனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.