திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேங்கடத்தானூரை சேர்ந்தவர் பிரபாகரன் , தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் வீட்டின் அருகே மாட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்தன. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் எழுந்து சென்று பார்த்தபோது, பிரபாகரனின் வீட்டுக்குள் தீ எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பிரபாகரன் கட்டிலில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் டி.வி., கட்டில் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து கிடந்தன. வீட்டின் அருகே காலி மண்எண்ணை கேனும், தீப்பந்தமும் கிடந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரன் மீது மர்ம நபர்கள் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் , பிரபாகரனுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலை என்பவருக்கும்  இடையே கள்ளக் காதல் இருந்து வந்தது.

இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த சந்திரகுமார் அவரது மனைவியையும், பிரபாகரனையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரபாகரனை, சந்திரகுமாரின் உறவினர் ஒருவர் தாக்கியுள்ளார். ஆனாலும் பிரபாகரன், மணிமேகலையுடன் பழகி வந்துள்ளார்.

இதனால் அவரை சந்திரகுமார் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படிநேற்று முன்தினம் இரவு பிரபாகரன் அவரது வீட்டில் அயர்ந்து தூங்கியதும் அங்கு சந்திரகுமார் தனது தந்தை முத்துச்சாமியுடன் சென்றார். 

வீட்டில் பிரபாகரன் மட்டுமே தூங்கி கொண்டிருந்ததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சந்திரகுமார், தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை வீட்டிற்குள் ஊற்றி விட்டு, தீப்பந்தத்தில் தீயை பற்ற வைத்து வீட்டிற்குள் போட்டு விட்டு தந்தையுடன் தப்பி சென்று விட்டார்.

இதில் வீடு முழுவதும் தீப்பற்றியதில், பிரபாகரன் தப்பிக்க முடியாததால் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சந்திரகுமார் மற்றும் அவரது தந்தை முத்துச்சாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.