திருமணத்துக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த காதலனின் முகத்தை கத்தியால் சிதைத்த காதலியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியும், மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அப்பெண் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி இளைஞர் தொடர்ந்து திருமணத்தை தவிர்த்து வந்துள்ளார். சமீபத்தில் திருமணம் குறித்து கேட்டதற்கு, இளைஞர் தொழில் செய்ய விரும்புவதாக கூறி கல்யாணத்தை நிராகரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், கல்லூரிக்கு செல்லும்போது காதலனை வழி மறுத்துள்ளார். பின்னர், ‘நீ அழகா இருக்கண்ணுதான பெருமைப்பட்டுட்டு இருக்க, இப்போ யாரு உன்ன கல்யாணம் பண்ணுவாங்கணு பாக்குறேன்’ என கூறிக்கொண்டே மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனின் முகத்தில் சரமாரியாக கிழித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த காதலன் அலறித்துடித்துள்ளார். காதலனின் முகத்தில் இருந்து ரத்தம் சிந்துவதைப் பார்த்ததும் அப்பெண்ணும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திருமணத்துக்கு மறுத்த காதலனின் முகத்தை காதலி கத்தியால் சிதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.