உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கொடிபவுனு இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சேகர் இறந்து விட்டதால் கொடி பவுனு தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் கொடிபவுனுவுக்கும், குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்கிற லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் இவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அடிக்கடி கொடிபவுனின் வீட்டுக்கு சென்று  உல்லாசமாக இருந்து வந்துள்ளார்..

இது குறித்து தகவல் அறிந்த கொடிபவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடிபவுனு, குமாரமங்கலம் சென்றார். அப்போது அங்கிருந்த ராமுவிடம், எனது மகள்கள் பெரியவர்களாகி விட்டனர். எனவே இனிமேல் என்னை தேடி வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமு கொடிபவுனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் அழுதுகொண்டே தனது வீட்டு சென்றார்.

இதையடுத்து  கொடிபவுனுவை சமாதானம் செய்வதற்காக நேற்று காலை ராமு சிறுவத்தூர் சென்றார். அப்போது அருகில் உள்ள நிலத்தில் கொடிபவுனு நின்று கொண்டிருந்தார். இதைபார்த்த ராமு, அவரை சமாதானப்படுத்த முயன்றார். 

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமு, கொடிபவுனை அரிவாளால் வெட்டினார். இதைபார்த்த கொடிபவுனுவின் தாய் ராசாத்தி ராமுவை தடுக்க முயன்றார். இருப்பினும் அவரை தாக்கி கீழே தள்ளிய ராமு, கொடிபவுனுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ராமுவை தேடி வந்தனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராமுவை போலீசார் கைது செய்தனர்.