சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர்  தொழிலதிபர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ரித்தேஷ் சாய்  என்ற 10 வயது மகன் இருந்தான். மஞ்சுளா .  சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்தார். இந்த குடும்பத்தினருடன் நாகராஜ் என்பவர் நல்ல  நண்பர்போல பழகி வந்துள்ளார். 

இதனிடையே நாகராஜும் மஞ்சுளாவும் நெருங்கிப் பழகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன்  அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், ரித்தேஷ் சாயை கடத்திச் சென்று சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் நாகராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மிகப் பரபரப்பக பேசப்பட்ட இந்த வழக்கில் கடந்த 9 மாதங்களாகச் சிறையில் இருந்த நாகராஜ் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், அவர் திருவண்ணாமலையில் உள்ள செல்போன் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

இந்நிலையில்தான் நாகராஜ் கடந்த 29 ஆம் தேதி கண்டம், துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொலை தொடர்பாகத் திருவண்ணாமலை டவுன் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதில் ரித்தேஷ் சாய் கொலை செய்யப்பட்ட பிறகு கணவர் கார்த்திகேயனைவிட்டுப் பிரிந்த மஞ்சுளா, சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். தன்னிடம் நல்லவன் போல் பழகி தனது பெயரைக் கெடுத்தது மட்டுமல்லாமல், அன்பு மகனையும் கொன்று விட்டானே என மஞ்சுளா உள்ளத்தில் பழி வாங்கும் எண்ணம் மேலோங்கியது.

 

இதையடுத்து நாகராஜனை கொலை செய்ய மஞ்சுளா திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களிடம் துப்பாக்கி வாங்கி வர சொன்னார். ஆனால் அவர்கள் மஞ்சுளாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பொம்மைத் துப்பாக்கியை வாங்கித் தந்து விட்டனர்.

 இந்தச் சம்பவத்தில் மஞ்சுளா மற்றும் அவரின் நண்பர்களை சைதாப்பேட்டை போலீஸார்  கைது செய்தனர். அப்போது மஞ்சுளாவிடம் போலீஸார் விசாரித்தபோது என் மகனைக் கொலை செய்த நாகராஜை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

 

தற்போது இந்தச் சபதத்தை 9 மாதங்களுக்குப் பிறகு  நாகராஜ் ஜாமீனில் வெளியில் வந்தும் அவரை கூலிப்படை உதவியுடன் மஞ்சுளா கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து  தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.