கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஜெயின் கோயிலில் 46 சவரன் மதிப்புள்ள தங்க பூஜை பொருட்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் ரங்கநாதன் அவின்யூ பகுதியில் ஸ்ரீ கீழ்பாக் ஸ்வேதாம்பர் மூாத்தி பூஜா என்ற ஜெயின் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி மீனா சாக்ரியா தினமும் பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 13ம் தேதி மீனா சாக்ரியா கோயிலுக்கு சென்றபோது வீட்டில் இருந்து 46 சவரன் மதிப்புள்ள தங்க பூஜை பொருட்கள் கொண்டு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். 

பின்னர் தங்க பூஜை பொருட்களை சாமி சிலை அருகே வைத்துவிட்டு கோயிலை 2 முறை சுற்றி வந்து பார்த்தபோது, சாமி சிலை அருகே வைத்திருந்த பூஜை பொருட்களுடன், பூசாரி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே மீனா காக்ரியா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

போலீசார் நடத்திய விசாரணையில் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்த விஜய் மோதிலால் கொள்ளையடித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில், விஜய் மோதிலால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தனது சொந்த ஊரான குஜராத்துக்கு தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்தது. 

உடனடியாக கோயம்பேடு சென்ற போலீசார், விஜய் மோதிலாலை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது நண்பர் மகேந்திரனுடன் சேர்ந்து பல நாட்களாக திட்டம் தீட்டி, தங்கத்தாலான பூஜை சாமான்களை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய தங்க பூஜை சாமான்களை கர்நாடகாவில் உள்ள மகேந்திரனிடம் கொடுத்ததாகவும் தெரிவித்து உள்ளார். 

பிறகு கர்நாடகா சென்ற போலீசார் மகேந்திரன் அடகு கடையில் விற்பனை செய்த 46 சவரன் மதிப்புடைய தங்க பூஜை சாமான்களையும், 350 கிராம் வெள்ளி பொருட்களையும் மீட்டனர். விஜய் மோதிலாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள மகேந்திரனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை