புதுச்சேரி அருகே நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காரில் நிர்வாண நிலையில் சடலமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வந்த இவர், நித்தியானந்தாவின் சீடராக இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏம்பலத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரம கிளை நிர்வாகியாக இருந்து வந்தார். அதன் பிறகு அதில் இருந்து விலகி பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வஜ்ரவேலு ஏம்பலம் அருகே செம்பியம்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வசந்தாவிடம் ரூ. 2 லட்சம் பணம் வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு காரில் சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தாவிடம் போனில் பேசி கேட்டபோது, வஜ்ரவேல் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதனிடையே, வஜ்ரவேலுவின் கார் பாகூர் அருகே குருவிநத்தம் சமுதாயநல கூடம் அருகில் கேட்பாரற்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை திறந்து பார்த்தனர். காரின் பின் இருக்கையில் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சமும் மாயமாகி இருந்தது. இதனையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வஜ்ரவேல் பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.