திருவையாறு அருகேயுள்ள கிராமத்தில் வசிக்கும் பெண் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்தப்பெண்ணின் கணவர் இறந்து விட்டார். அவர் தனது 17 வயது மகளுடன் தனியாக அவர் வசித்து வந்தார். மகள் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அதிகாலை தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், யாரோ அவரை அடித்து கொலை செய்து விட்டதாகவும் அவரின் மகள் அக்கம் பக்கத்தினரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது அவரின் மகள் அங்கிருந்து நழுவி சென்றுள்ளார். எனவே, சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்பெண்ணும், உறவுக்கார வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால், உறவுமுறையில் இருவரும் அண்ணன் – தங்கை என்பதால் அப்பெண்ணின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஒடிவிட்டனர். ஆனால், மைனர் பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக அப்பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த அந்த வாலிபர் மீண்டும் அப்பெண்ணின் தாயிடம் வந்து வழக்கை வாபஸ் பெறுமாறும், அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும் கேட்டுள்ளார்.

ஆனால், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இது கடந்த 18ம் தேதி இரவு தாய்க்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த இளம் பெண், இரும்பு கம்பியால் தாயின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அதன்பின் யாரோ கொலை செய்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பெண்னை கைது செய்த போலீசார், அவரின் காதலரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.