ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் .  அந்த பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் டிக்-டாக் செயலியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள், இளம்பெண்களை மிகவும் ஆபாசமாகவும் கொச்சைப்படுத்தியும் பேசியதோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே குறிப்பிட்ட சமுதாயத்தை ஆபாசமாக பேசியவர் மீது கடுமையான சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 100–க்கும் மேற்பட்டோர் உமராபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

பின்னர் அவர்கள், வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆதரவாகவும், அவரை விடுவிக்கக்கோரியும் உமராபாத் போலீசில் நிலையத்திற்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.