வரவர காதல் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது. 10 வயதிலேயே காதலில் விழுந்து 16 வயதில் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி காதலுடன் ஊர் விட்டு ஊர் சென்று குடித்தனம் நடத்தும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்து விடுகிறது.  

அதற்கு தற்போதைய உதாரணம் இந்தக் காதல் கதை... சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அந்த 16 வயது பெண். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் 17 வயதான பிளஸ் 2 மாணவன் ஒருவரும் படித்து வந்துள்ளார். 16 வயதுக்கு 17 வயது மீது ஈர்ப்பு. 11ம் வகுப்பு மாணவியும், 12ம் வகுப்பு வகுப்பு மாணவனும் சேர்ந்து காதல் பாடத்தை கரைத்து குடித்திருக்கிறார்கள். 

இளம் வயதிலேயே காதல் போதையை ஏற்றிக் கொண்டதால் தாக்குப்பிடிக்க முடியாத இந்த இளம்ஜோடிகள் பெற்றோரையும், படிப்பையும் மறந்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமாகி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இருவரது பெற்றோர்களும் உடனே வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்க அப்போது தான் இது காதல் விவகாரம் எனத் தெரிய வந்திருக்கிறது. போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி காதல் கிளிகளுக்கு வலை வீசினர்.  

அந்த மாணவன் ஆசை வார்த்தை கூறி மாணவியை தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனே மும்பை விரைந்த போலீசார், அங்கு குடும்பம் நடத்தி வந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டனர். சென்னைக்கு இருவரையும் அழைத்து வந்து மாணவனை கைது செய்து சிறைக்கு அனுப்பி விட்டு, மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.