ஈரோடு அருகே இருக்கும் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ஜோகரம்மாள்(80). இவரது மகன் சாதிக் பாட்சா. இவருக்கு பீர் முகமது(39) என்னும் மகன் இருக்கிறான். பீர் முகமத்திற்கு திருமணம் முடிந்து மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது அவர் ஈரோட்டில் இருக்கும் ஒரு தறித்தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

பீர் முகமது அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவும் குடித்தவர் இன்று அதிகாலையில் உச்ச போதையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டில் ஜோகரம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம் போல பாட்டியுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பீர் முகமது வீட்டில் இருந்த டி.வி யை எடுத்து பாட்டியின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு ஜோகரம்மாள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் ஜோகரம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதியப்பட்டு பீர் முகமது கைது செய்யப்பட்டுள்ளார்.