பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த 80 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குட்கா கடத்தி வருவதாக  சென்னை செம்பியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெரம்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த பெங்களூரு மெயில் ரயிலை, பெரம்பூரில் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில்,  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அரக்கோணம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (38), ஆவடி கன்னிகாபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  இவர்களிடம் இருந்து 80 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குட்கா கடத்தலில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, கடத்தி வரப்பட்ட குட்காவை  சென்னையில் எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.