திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன், போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளை இந்திராநகரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் 7 வயது சிறுமி. இன்று காலை விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உதடுகளில் ரத்த காயங்கள் இருப்பதால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் படுகொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.