பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென் மோடி. இவர் டெல்லியின்  சிவில் லைன்ஸ் பகுதியில் குஜராத்தி சமாஜ் பவனுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை ஆட்டோவில் இருந்து இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த  2 மர்ம மனிதர்கள் அவர் கையில் வைத்திருந்த  கைப்பையை பறித்து சென்றனர். தமயந்தி கைப்பையில் சுமார் ரூ.56,000, ஒரு கைக்கடிகாரம், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வைத்து இருந்தார்.

டெல்லியில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை டெல்லியில் இருந்து 4,762 வழிப்பறி  சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி நடத்துள்ளதால் களத்தில் போலீஸ் படையே களம் இறக்கப்பட்டது.  அவரது கைப்பையை கொள்ளையடித்த இருவரை அடையாளம் கண்டு கைது செய்ய 700 போலீசார் ஈடுபட்டனர். மற்றும் 200 சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

மோட்டார் சைக்கிளில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு மர்ம ஆசாமிகளையும் போலீசார் அடையாளம் கண்டனர்.  அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. சி.சி.டி.வி காட்சிகள் அவர்கள் சுல்தான்புரிக்கு செல்வதைக் காட்டியது. தொடர் விசாரணையில் போலீசார் அரியானாவின் சோனிபட்டுக்கு சென்றனர். அங்கு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் கவுரவ்  சோனிபட்டைச் சேர்ந்தவர். மற்றொரு நபரான படல் சுல்தான்பூரில் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும்  கைப்பையை போலீசார் பறிமுதல் செய்தனர்.