சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே இருக்கிறது காமனேரி கிராமம். இங்கிருந்து கோவிலூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடித்து கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த காவலர்கள் சடலம் கிடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டு இருந்தார்.

கொலையானவர் அருகே ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனம் ஆகியவை கிடந்தது. அதில் இருந்த தகவலின்படி சடலமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(62) என்பது தெரியவந்தது. இவர் சேலம் பகுதியில் பிரபல தொழிலதிபராக விளங்கி வந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக குழந்தை இல்லாததால் மனைவியை விட்டு பிரிந்த பாலசுப்ரமணியன், சேலத்தில் நண்பர் ஒருவருடன் தங்கி இருந்து தொழில் பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். கொலைவழக்கில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை நடந்த பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கார் ஒன்று வந்தது. அதில் ஜோதிடர் இளையராஜா என்பவர் இருந்தார். அவருடன் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் காவல்துறையினரின் கிடுக்குபிடி கேள்விகளில் பாலசுப்ரமணியத்தை கொலை செய்த தகவலை அவர்கள் கூறினர்.

ஜோதிடர் இளையராஜாவின் மனைவிக்கும் பால சுப்ரமணியத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது இளையராஜாவிற்கு தெரிய வரவே அவர் பாலசுப்ரமணியத்தையும் மனைவியையும் கண்டித்துள்ளார். தொடர்ந்து கள்ள உறவு நீடித்து வந்ததால் ஆத்திரமடைந்த இளையராஜா பால சுப்பிரமணியத்தை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதன்படி நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பால சுப்பிரமணியத்தை கொலை செய்துள்ளார். அவர்கள் அளித்த தகவலின் படி கொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட மேலும் இருவர் கைதாகியுள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம் மற்றும் நைலான் கயிறு ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளது.

Also Read: அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை..! பழிக்குப்பழியாக தீர்த்து கட்டிய மர்மகும்பல்..!