லண்டனில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னையை சேர்ந்த தாத்தாவை 6 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

சென்னையை பூர்விகமாக கொண்ட கவிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இவரது இளைய மகளான 17வயது சிறுமி லண்டனில் படித்து வருகிறார்.கடந்த சில வருடங்களாக மன அழுத்தமாக காணப்பட்ட சிறுமியை, பெற்றோர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். மேலும் உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு சிறுமியை உட்படுத்தினர்.

அப்போது அவர் படித்த பள்ளியில் உளவியல் சார்ந்த கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது சிறுமி கூறிய தகவல்களை கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சிறுமி விடுமுறைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது சிறுமியின் உறவினரான 68 வயது தாத்தா அந்த சிறுமியை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளாகி மனரீதியாக கடந்த 6 ஆண்டுகளாக சித்ரவதை அனுபவித்துள்ளார்.

இதன் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார் அந்த சிறுமி. இந்த தகவலை உளவியல் மூலமாக அறிந்து கொண்ட ஆசிரியர் சிறுமியின் பெற்றோரை அழைத்து கூறியுள்ளனர். அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஆன்லைன் மூலமாக கடந்த 11ஆம் தேதி புகார் அளித்தனர்.

இதையடுத்து இந்த புகார் குறித்து சென்னை திருமங்கலம் காவல்துறையினர்  விசாரணை நடத்தியதில் உண்மை உறுதி செய்யப்பட்டதால் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். லண்டன் சிறுமிக்கு கொடுத்த பாலியல் தொந்தரவால் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.