திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த யாசகர் படுகொலை - காவல்துறை விசாரணை
திண்டுக்கல் அருகே அண்ணா நகர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் அடித்துக் கொலை. கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளி குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி ரோமன் மிஷின் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 65). இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடிந்து திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனம் வெறுத்த அந்தோணி வீட்டை விட்டு வெளியேறி காவி உடை அணிந்து கொண்டு யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
தான் யாசகமாக பெற்ற பணத்தை வங்கியில் சேர்த்து வைத்து கோவில்களுக்கு தானம், தர்மங்கள் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அந்தோணி திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகர் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் அந்தோணி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தூங்கிக் கொண்டிருந்த அந்தோணியை பளமான கூரிய ஆயுதங்களை கொண்டு தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்தோணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையின் மரணத்திற்கு திமுக தான் காரணம்; நீதி கேட்டு வந்த சிறுவர்களால் பரபரப்பு
இவருக்கு ஒய் எம் ஆர் பட்டியில் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு குடும்பத்தினருக்கும், இவருக்கும் இடையில் நடந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலை நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதை அடுத்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.