சேலத்தில் 60 வயது  மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மனைவி லட்சுமி (60). லட்சுமி கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து மல்லூர் அருகே உள்ள ஆறங்கால் திட்டு என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு காட்டுப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக தனியாக அமைந்துள்ளது.

இந்த பகுதியில் கல்குவாரி உள்ளதால் லட்சுமி, இங்கு தினமும் கூலி வேலைக்கு சென்று வந்தார். பின்னர் நாளடைவில் கூலிவேலைக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் லட்சுமி ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.  வழக்கம்போல் நேற்று மாலை லட்சுமி, பட்டியில் அடைத்திருந்த ஆடு, மாடுகளை அவிழ்த்துக் கொண்டு அருகே உள்ள மலைகரடு பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். இரவு ஆனதும் ஆடுகள், மாடுகள் ஒவ்வொன்றாக வீடு திரும்பின. ஆனால் லட்சுமி மட்டும் வீட்டுக்கு வரவில்லை. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள், பக்கத்தில் உள்ள மலைகரடு பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை.

இதனையடுத்து, வீட்டின் பின்புறத்தில் லட்சுமி ஆடைகள் களைந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தார். இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் லட்சுமியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த நகைகளை குற்றவாளிகள் திருடி சென்று உள்ளனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 60 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.