திருச்சியில் படிப்பு ஏறவில்லை என்பதற்காக 5 வயது மகளை கொடுமைப்படுத்திக் கொன்ற தம்பதியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி நித்தியகலா. இருவரும் ஆசிரியர்கள். இவர்களுடைய மகள் லத்திகாஸ்ரீ (வயது 5). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார். லத்திகாஸ்ரீ வயதில் சிறியவர் என்பதால் அவருக்கு படிப்பு ஒழுங்காக வரவில்லை என்று கூறப்படுகிறது.  

 இது ஆசிரிய தம்பதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. லத்திகாஸ்ரீயை தினசரி படி, படி என்று கொடுமைப்படுத்தியுள்ளனர். பள்ளி விடுமுறை விட்டுள்ள நிலையிலும் இது தொடர்ந்துள்ளது. விளையாட வேண்டிய பருவத்தில், சிறுமி மீது படிப்பு திணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்தால், கடுமையான அடி, உதை விழுந்துள்ளது. 

சம்பவத்தன்று இதுபோல் சிறுமியை கொளுத்தும் வெயிலில் முட்டி போட்டு நிற்க வைத்துள்ளனர். கோடை வெயில் கொளுத்தும் நிலையில், வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருச்சி, சேலம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

சிறுமியின் பெற்றோர் தந்த டார்ச்சரால் தான் சிறுமி உயிரிழந்தார் எனப் புகார் கிளம்பிய நிலையில், போலீசார் சிறுமியின் பெற்றோரான ஆசிரியத் தம்பதியைப் பிடித்து விசாரிக்கின்றனர். பெற்ற மகள் மீதே தங்கள் அதிகாரத்தைத் திணித்து இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் ஆசிரியர்கள் என்பதுதான் அந்தப் பகுதி மக்களின் வியப்பாக இருக்கிறது. நம் கல்வி எப்படியான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.