9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 9ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த வைகை நகரைச் சேர்ந்தவர் சிகாமணி (வயது 45). அதிமுகவைச் சேர்ந்த இவர் பரமக்குடி நகர் மன்ற 3வது வார்டு கவுன்சிலராக பொருப்பு வகித்து வருகிறார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இதே போன்று பிரபாகரன் என்பவரும், மாதவன் நகரைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரும் இவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் கயல்விழி என்பவர், தங்கள் வீட்டருகில் குடியிருக்கும் குடும்பத்தில் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு பணம் செலுத்த முடியாத நிலையில், படிப்பை பாதியில் நிறுத்தும் தருவாயில் இருப்பதாக சிகாமணியிடம் தெரிவித்துள்ளார். தாம் அந்த மாணவிக்கு உதவுவதாக தெரிவித்த சிகாமணி, அந்த மாணவியை நேரில் அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கயல்விழியும் அந்த மாணவியை நேரில் அழைத்துச் சென்றுள்ளார். மாணவியை காரில் ஏற்றிக் கொண்ட சிகாமணி தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து பிரபாகரன், ராஜா முகமது என மூவரும் அடுத்தடுத்து மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: 4 மாத குழந்தையை தகப்பனே கொலை செய்த கொடூரம்
இந்நிலையில், மாணவியை அழைத்து வந்ததற்கு கயல்விழி பணம் கேட்கவே அதற்கு மூவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் குற்றச்செயலில் ஈடுபட்ட சிகாமணி, பிரபாகரன், ராஜாமுகமது ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
குடி போதையில் தகராறு; கூலித் தொழிலாளி படுகொலை: ஆதரவின்றி நிற்கும் 5 குழந்தைகள்
மேலும் இந்த விவகாரத்தில் இடைத் தரகர்களாக செயல்பட்ட கயல்விழி மற்றும் அன்னலட்சுமியையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.