தஞ்சாவூர் அருகே இருக்கும் வடக்கு வாசல் பொந்திரிபாளையத்தைச் சேர்ந்தவர் விஜி. வயது 37. அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த 28ம் தேதி காலையில் மர்ம நபர்களால் விஜி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்த தஞ்சை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தொழிலாளி விஜிக்கும் வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) மற்றும் ஆகாஷ் (23) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சங்கர், திமுகவின் முக்கிய பிரமுகராக அந்த பகுதியில் செயல்பட்டு வந்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் விஜியையும் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதுதொடர்பான முன்விரோதம் தான் விஜிக்கும் சங்கருக்கும் இடையே இருந்து வந்திருக்கிறது. இந்தநிலையில் விஜியை பழிவாங்கும் விதமாக அவரை கொலை செய்ய சங்கர் மற்றும் ஆகாஷ் முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி பிரதீபன் (23), தினேஷ்(24), கோபி(29) ஆகியோரின் உடந்தையுடன் விஜியை கொலை செய்துள்ளனர். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இது தெரியவந்தது.  இதையடுத்து ஐந்து பேரையும் கைது செய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.