இந்த வன்முறையில் காவல் துறை அதிகாரி உள்பட பலர் பலத்த காயமுற்று, மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி ஜஹான்கிர்புரி பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டோரை டெல்லி காவல் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கைதான நபர்களில் ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை எந்த குற்றச்சாட்டும் இன்றி அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரை காவலில் வைக்க முடியும். 

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்:

கடந்த சனிக்கிழமை அன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி மத ஊர்வலங்களும் நடைபெற்றன. இவ்வாறு டெல்லி மாநிலத்தின் ஜஹாங்கிர்புர் பகுதியிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களின் கையில் துப்பாக்கிகள், கத்தி, வாள் என அதி பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். மேலும் அதனை கண்மூடித் தனமாக வீசினர். 

இதை அடுத்து ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதனால் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். ஒருகட்டத்தில் தாக்குதல் தீவிரம் அடைந்ததை அடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறின. இந்த வன்முறையில் காவல் துறை அதிகாரி உள்பட பலர் பலத்த காயமுற்று, மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

வீடியோ: 

வன்முறை குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து, போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் இரண்டு சிறுவர்கள் உள்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழக்க பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இத்துடன் சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க போலீசார் தொடர் அணிவகுப்பு, ரோந்து என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு டிரோன் கேமரா மூலமாகுவும் தீவிர கண்காணிப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.