அண்மைக்காலமாக  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் டாக்டர்  பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலம் இந்தோர் மாவட்டத்தில் உள்ள மவ் பகுதியில் உள்ள ஒரு தம்பதி தனது 4 வயது பெண் குழந்தையுடன் ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு பாலதின் கீழ் வசித்து வந்தனர். 

அவர்கள் இன்று உறங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் குழந்தையை அங்கிருந்து கடத்திச்சென்றுள்ளனர். காலை எழுந்த உடன் தனது குழந்தையை காணவில்லை என்பதை உணர்ந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடினர். 

அப்போது அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த ராணுவ குடியிருப்பில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக சிலர் தெரிவித்தனர். 
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பெற்றோர் தங்கள் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மத்திய பிரதேசத்தில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.