குழந்தைகளுடன் தீக்குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்! அதிர்ச்சியில் உயிரை விட்ட தந்தை!
கள்ளக்குறிச்சி நத்தாமூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் உள்ள நந்தாமூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் இந்தியா தீக்குளித்து உயிழந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தையும் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன். உரக்கடை நடத்திவரும் இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். திருமணமான இவரது மகள் திரவியம் மனநலம் சரியில்லாத காரணத்தால் தந்தையுடன் நத்தாமூர் கிராமத்திலேயே தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு திரவியம் தனது 2 குழந்தைகள் ரியாஷினி (வயது 5) மற்றும் விஜயகுமாரியுடன் (வயது 3) வீட்டில் தீக்குளித்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தன் குழந்தைகளையும் கட்டி அணைத்துக்கொண்டிருக்கிறார். இதனால் மூன்று பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மகளும் குழந்தைகளும் தீக்குளிப்பதை கண்ணெதிரே பார்த்தும் தன்னால் காப்பாற்ற முடியாததால் மனம் உடைந்த பொன்னுரங்கனும் அந்த இடத்திலேயே பலியானார். வீட்டில் தீ பற்றியதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் நத்தாமூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் காவல்துறையினர் பலியான நால்வரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.