புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் மொய் விருந்து விழா நடைபெற்றது. இதில் நான்கரை கோடி ரூபாய் மொய் வசூலானது. 

இந்த நிலையில் வடகாடு கூட்டான் புஞ்சையில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்களை வீட்டில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றனர். மொய் தொகையை அவர் வீட்டில் வைத்திருந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் 4 கொள்ளையர்கள் புகுந்து பணத்தை திருட முயன்றனர். 

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருகே இருந்தவர்கள் விரட்டியதில் சோளக்கொல்லைக்குள் ஒழிந்திருந்த ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், மாட்டிக்கொண்ட திருடன், அணவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவனேசன் என்பதும், தான் வெளிநாடு செல்ல பணம் கட்டி ஏமாந்த விட்டதாகவும், அந்த கடனை அடைக்க கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் திருட முயன்றதாகவும் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் தன் வீட்டில் திருட நான்கிற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சோளக்கொல்லைக்குள் மறைந்திருந்தனர். அதில் ஒருவன் வீட்டினுள் திருட வந்தபோது நான் பார்த்ததால் அதிர்ஷ்டவசமாக கொள்ளை முயற்சிகள் தடுக்கப்பட்டது. அதில் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். மற்றவர்களையும் போலீசார் உடனே கைது செய்யவேண்டும்’’ என்று கூறினார்.