திருச்சி சுப்ரமணியபுரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது. திருச்சியின் புறநகர் மாவட்ட காவல் நிலையங்களுக்கான தலைமை அலுவலகமாக இது விளங்குகிறது.

மாவட்டம் முழுவதும் இருக்கும் காவல்துறையினர் பலநாட்களாக உபயோகப்படுத்தி பழுதான வாக்கிடாக்கிகள் இங்கிருக்கும் குடோனில் வைக்கப்படுவது வழக்கம். அவை அனைத்தும் மீண்டும் சென்னை தலைமை காவல்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் காவல்துறை சார்பாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குடோனில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து 33 வாக்கிடாக்கிகளும் 11 கையடக்க மைக்களும் குறைந்திருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறை அலுவலகத்திலேயே களவு போனதால் உடனடியாக அதுகுறித்து விசாரிக்க தொடங்கினர்.

காவல்துறை அலுவலகத்தை எப்போதும் சீனிவாசன் என்கிற துப்புரவு தொழிலாளி சுத்தம் செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது குடோனை சுத்தம் செய்தபோது வாக்கிடாக்கிகளை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். தினமும் ஒரு வாக்கிடாக்கிகளை எடுத்துச் சென்று கனகராஜ் என்பவரிடம் விற்றதாக கூறினார்.

இதையடுத்து எஸ்.பி அலுவலகம் சார்பாக திருச்சி மாநகர போலீஸ், கே.கே நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி சீனிவாசனையும், கனகராஜையும் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி அலுவலகத்திலேயே திருட்டு நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.